

பச்சை இரத்தம்
இயக்குநர் சேரன்
அன்று
பிஞ்சுக் குழந்தையின்
பெருவிரல் நகக்கண்ணில்
அழுக்கால் புண்ணு வந்து
வெடீர் வெடீரென புடுங்க
அழுது துடிச்சிருச்சே..
ராவெல்லாம்
தூங்கலையே..
தாயார் காலையிலே
திண்ணையிலே இருக்கையிலே
ஸ்கூல் வாத்தியார்
கடைக்கார செட்டியார்
நாட்டாமை பெரியவுக
காதுவளர்த்த கிழவின்னு
எல்லாரும் கேட்டாக..
என்னடி வீட்டுல
இம்புட்டு சத்தமுன்னு..
அம்புட்டு பேருக்கும்
மனசு துடிச்சிருச்சாம்
மறுகி நின்னாகலாம்
விஷயம் தெரிஞ்சுக்க
விடியிற வரைக்கும்..
இன்று
இங்கே
திருந்தாத நாடெல்லாம்
திமிராலே ஒன்றுசேர்ந்து
இரக்கமின்றி
ரத்தக்குளியல்..
ரத்தம்னா
ஆட்டு ரத்தம்
மாட்டு ரத்தம்
அப்பன் ரத்தம்
ஆத்தா ரத்தம்
எல்லாம் போதலைன்னு
பிஞ்சுக் குழந்தைகளின்
தாய்ப்பால் நிறம் தெரியும்
பச்சை ரத்தம்..
கால்கள் சதையிழந்து
கைகள் இடம்மாறி
தலையில் மூளை சிதறி
கனவுகள் மறையாத
கருவிழி சிதைந்து..
நெஞ்சுக்கூட்டில்
வெடிவெடித்து
ஆண்சிசுவா
பெண்சிசுவா
என யாருமறியாத
கொடுஞ்செயலை
கொலைவெறியை..
ஒன்றல்ல
ரெண்டல்ல
லட்சக்கணக்கில்
பிணக்குவியல்..
ஓர் இனத்தையே
அழித்து நசுக்க
அவல நிலையில்
கைநீட்டி உதவிகேட்டு
தவிக்கும் பிஞ்சுகளின்
அலறல் ஓலம்..
கதறல் குரல்கள்..
யார் காதிலும்
விழாத வண்ணம்..
இங்கே..
எந்தக் கூட்டணி?
எந்த இடம்?
எத்தனைக் கோடி?
எங்க ஓட்டு!
------- சின்னத்துக்கே!..
வெட்கமடா..
மறத்தமிழா!
மானம் இழந்து..
மதிகெட்டுத் திரியும்
கேனத் தமிழா!
இனி
நீ,
மார்தட்ட..
இனப்பெயர் உனக்கு
இல்லையடா!
ஈனச்சாதி என்ற
பெயரே மிஞ்சுமடா!

